Archive for தொண்டு

இதுதான் இந்திய ராணுவம்

பிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த ராணுவ வீரர்கள் 

ஜம்மு காஷ்மீரில் இருக்கின்ற ரஜோரி மாவட்டத்தில் கண்டி கிராமத்தில் இருந்த நமீம் அக்தர் என்கிற பெண்ணிற்கு பிரசவவலி எடுத்தது. அருகில் எந்த மருத்துவ மனையும் கிடையாது. போக்குவரத்து வசதி எதுவும் இல்லை.  ஆபத்திற்கு ராணுவ வீரர்கள் கைகொடுத்தனர். ராணுவவீரர்கள் அப்பெண்ணை ஒரு கயிற்றுக்கட்டிலில் வைத்து 7கி.மீ. தூரத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாயிலாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு  அவருக்கு சுகப்பிரசவம் நடந்தது அழகான பெண் குழந்தை பிறந்தது. மனிதாபிமானம் நிறைந்த நமது ராணுவ வீரர்களின் பணியினை பாராட்டுவோம்.

“தாணே புயல்” — தொண்டுப் பணியில் ஆர்.எஸ்.எஸ்.

புதுவை-கடலூரை புரட்டிப் போட்ட தாணே புயல் 

“தாணே புயல்” தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒருகை பார்த்து விட்டது. இயற்கையின் சீற்றத்தின் முன் மனித முயற்சிகள் நிற்கமுடியாது, எடுபடாது என்பதற்கு தாணே புயல் சீற்றத்தைக் குறிப்பிடலாம்.

உயரே எழுந்து சீறிப் பாய்ந்து வந்து தாக்கிய கடலலைகள். சுழற்றியடித்த சூறாவளிக் காற்றுடன் தொடர் மழையும் சேர்ந்து கொண்டு மக்களை பெரும் துயரத்தில் தள்ளியது. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வீரர்கள் இந்திய அணியை சுருட்டிப் போட்டதைப் போன்று தாணே புயல் கடலூர் புதுச்சேரியை சுருட்டிப் போட்டுவிட்டது.

அடித்த சூறாவளிக் காற்றில் லட்சக்கணக்கான மரங்கள் பெயர்த்து எறியப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் பலகோணத்தில் வளைந்து நெளிந்து விழுந்து கிடந்தன. மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளும் இருளில் மூழ்கிப் போயின.

பி.எஸ்.என்.எல்.  நிறுவன மின்னணு கோபுரங்கள் ஆங்காங்கு நொறுங்கிப் போய்க் கிடந்தன. தனியார் அலைபேசி நிறுவங்கள் நிறுவியிருந்த மின்னணு கோபுரங்கள் எங்கு பறந்து சென்றன என்று தெரியவில்லை. அதனால் அலைபேசிகள் அனைத்தும் செயலிழந்தன. விடுமுறை நாளானதால் வழக்கம் போல் அரசு  அதிகாரிகள் எவரும் இந்தப் புயலின் தாக்கத்தைப் பற்றி கவலைப்படவில்லை.

ஏற்கனவே பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் சேமிப்புக் குட்டைகள் தோன்றியிருந்தது. சாலைகளில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அரசை வசைபாடி வாழ்த்திக் கொண்டுதான் வாகனங்களில் சென்று வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தானே புயல் மழையால் சாலைகளில் வாகனப் போக்குவரத்தைப் பார்க்க முடியவில்லை.

வெள்ளக்காடாக புதுச்சேரி

இம்மாதிரியான புயல் மழையைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டதால் மக்களும் எந்த முன்னேற்பாடு எதுவும் செய்து கொள்ளாமல் இருந்து விட்டனர். வெள்ளி சனி ஆகிய நாட்களில் பெய்த பெருமழையால் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். குடியிருப்புகளில் மழை நீர் மற்றும் சில இடங்களில் கடல்நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செலவேண்டியதாயிற்று.

மின்சாரம் இல்லை போக்குவரத்து இல்லை அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிட முடியாது. அரசும் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை. வழக்கம் போல் ஆபத்து என்றால் முந்திச்  செல்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தான் என்பதை இம்முறையும் நிரூபித்து விட்டனர்.

புதுச்சேரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கிய புதுச்சேரி கோட்டத்திற்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் பயிற்சி முகாம் ஆர்.எஸ்.எஸ்.பயிற்சி முகாம் அப்பகுதியில் நடைபெற்று வந்தது. இம்முகாம் டிசம்பர் 31 அன்று மாலைதான் முடிவடைவதாக திட்டமிடப்பட்டிருந்தது. புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக முகாம் முடிவடைய வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே முடித்துவிட்டு தொண்டர்கள் நிவாரணப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நிவாரணப் பணியைத் துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள், புயல் மழை சேதத்தினை அறிந்து கொள்ளப் புறப்பட்டனர்.  புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு எங்கும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. எனவே உடனடித் தேவையாக முழுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, குடிநீர் உடனடித் தேவையென அறிந்து கொண்டு அவைகளை சேகரிக்கத் துவங்கினர்.

நிவாரணப் பணியாற்றிட சாலையில் வீழ்ந்து கிடந்த மரங்கள் மின்கம்பங்கள் போன்றவைகள் பெரும் இடையூறுகளாக இருப்பதை அறிந்து முதலில் அவைகளை அப்புறப்படுத்தத் துவங்கினர். குறிப்பாக புதுச்சேரியில் சாலைகளில் வீழ்ந்து கிடந்த மரங்களையும் மின்கம்பங்களையும் அகற்றி வாகனங்கள் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதன் காரணமாக புதுச்சேரி நகரில் சில பகுதிகளுக்கு மீண்டும் மின் இணைப்பு தறுவது சாத்தியமாயிற்று.

புதுச்சேரி நகரில் சுமார் 600 கும் மேற்பட்ட வீடுகளுக்கு ப்ரெட், பிஸ்கட் போன்ற உணவுப் பதார்த்தங்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி போன்றவைகளை வழங்கினர். மேலும் இதே போன்ற நிவாரணப் பணிகளை வில்லியனூர், திருக்கனூர். காலாப்பட்டு பஞ்சாயத்து ஒன்றிய கிராமங்களில் இருக்கின்ற சுமார் 1,000 குடும்பத்தின ருக்கு வழங்கினர்.

கடலூர் மாவட்டத்தில் வண்டிப் பாளையம் புதுப்பாளையம் பகுதிகளில் பாதிப்பிற்கு ஆளாகிய 1,200 குடும்பத்தினர்களுக்கு 3 கிலோ அரிசி , மெழுவர்த்தி, தீப்பெட்டி கொசுவர்த்தி வழங்கப்பட்டது.

கடலூரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

அப்பகுதியின் கவுன்சிலரும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுடன் இணைந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டார். அவரது உறவினர் ஒருவர் மறைந்து விட்டதையும் பற்றிக் கவலை கொள்ளாமல் தொண்டாற்றியத்தை அறிந்த. அவரது செயலை அப்பகுதி மக்கள் பாராட்டத் தயங்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுடன் நிவாரணப் பொருட்கள் வழங்கிட வந்த மற்றொரு கவுன்சிலர் “இந்த பொருட்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். ஆள்  வழங்கப்படுகிறது. வேறு எவரும் கொடுத்திடவில்லை” என்று அவராகவே எடுத்துரைத்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று  நிவாரணப் பொருட்கள் வழங்கியதை மக்கள் பெரிதும் பாராட்டினர். 

புதுவைக் கோட்டச் செயலாளர் குரு சுப்பிரமணியன்

புதுவை கோட்டத் தலைவர் ஆடிட்டர் செல்வராஜ் மற்றும் கோட்டச் செயலாளர் குரு சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் 50கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்  வெள்ள நிவாரணப் பணியில்  ஈடுபட்டனர்.  மேலும் நிவாரணப் பணியினைத் தொடர்ந்து வருகின்றனர்.

வடசென்னைப் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட 5 குப்பங்களைச் சார்ந்த மக்களுக்கு 2 நாட்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அப்பகுதியில் நடைபெற்று வந்த ஆர்.எஸ்.எஸ். முகாமில் பங்கேற்று இருந்த தொண்டர்கள் இத்தொண்டுப் பணியில் ஈடுபட்டனர். பயிற்சி முகாமிற்கு வந்த தங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு செய்திட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் வெள்ள நிவாரணப் பணியில் ஆர்.எஸ்.எஸ்.

நிவாரணப் பணியில் ஆர்.எஸ்.எஸ்.& சேவாபாரதி தொண்டர்கள் திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு முழுவதும் பெய்த கடும் மழையினால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியது. வெள்ளநீர் வருவதை அறியாமல் பலர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அமைதியாக இருந்த நதி  7/11/2011 திங்கள் அதிகாலை 1.30 மணிக்கு தனது அசுரத்தனத்தைக்  காட்டியது.

சீறிப்பாயும் நொய்யல்

நொய்யலில் வெள்ளம் இருபுறமும் கரைபுரண்டு பாய்ந்ததில் கரையில் இருந்த வீடுகள் அடித்து இழுத்துச் செல்லப்பட்டன. மீட்பு பணிக்காக வந்த தீயனைப்பு படை  வந்து மீட்க முடியமல் போக, அதிரடிப்படை வந்து மீட்டது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள வீடு

காட்டாற்று வெள்ளத்தில் எப்படி  ஒரு  அசுரத்தனமான சீற்றம் இருக்குமோ அதைப் போல் நொய்யல் சீறிப் பாய்ந்ததில் 15,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலரது வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை நள்ளிரவு முதல் ஆர்.எஸ்.எஸ். மற்றும்  இந்து முன்னணித் தொண்டர்கள் மீட்கும் பணியில் ஈடுபடலாயினர். அவ்வாறு மீட்கப் பட்டவர்கள் அரசுப் பள்ளிக் கூடங்களில், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர். 

வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த ஆண்கள்,பெண்கள்,குழந்தைகளை கயிறு கட்டியும், வெள்ள நீரில் தூக்கி வந்தும் காப்பாற்றினர்.

பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள்

தற்காலிகமாக பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சேவா பாரதி சார்பில் காலையில் பல்பொடி வழங்குவதில் துவங்கி குழந்தைகளுக்கு பால், ரொட்டிகள் மற்றும் உடைகள் வழங்கப்பட்டது.

நேற்று சுமார் 6000 பேர்களுக்கு மூன்று வேலை உணவு மற்றும் தண்ணீர் பாக்கெட்கள் கொடுத்து உதவினர். அனைத்துப் பொருட்களையும் இழந்த வர்களுக்கு ரப்பர் சீட் மற்றும் பாய் கொடுக்கப்பட்டது.

பாய் மற்றும் ரப்பர் ஷீட் வழங்கப்பட்டது.

அவ்வப்போது தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. இத்துடன் 600 பாய்,  மெழுவர்த்தி  மற்றும் கொசுவர்த்தி வழங்கப் பட்டது.

வெள்ளம் பாதித்த பகுதியில் நோய்கள் பரவாமல் தடுத்திட ப்ளீச்சிங் பவுடர் தெளித்து தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டது.  ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி மற்றும் ஹிந்து இயக்கங்கள் செய்து வருகின்ற வெள்ள நிவாரணப் பணிக்கு திருப்பூர் விவேகானந்தா பள்ளி நிர்வாகம் தேவைப்படுகின்ற அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர். இன்றும் (8/11/2011)  சுமார் 6000-ம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

தற்காலிக நிவாரண இடங்களில் தங்கியுள்ள மக்கள் பகல் நேரத்தில் தங்கள் வீடுகளை சுத்தம் செய்வதற்காக சென்றுவந்தனர். ஆனால் அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளை  சேவா பாரதி செய்து கொடுத்தது

 

சேவாபாரதி வழங்கிய புதிய வீடுகள்

 வெள்ளத்தில் வீடிழந்த மக்களுக்கு சேவா பாரதி வழங்கிய

புதிய வீடுகள்     

கர்நாடகத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த வெள்ளத்தினால் ஏராளமானவர்கள் வீடு வாசல்களை இழந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கியதுடன் அவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தருவதற்கும் சேவா பாரதி முயற்சிகளை மேற்கொண்டது. கடந்த 7ஆம் தேதியன்று ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவதுர்கா தாலுகாவில் உள்ள அபரள கிராமத்தில் வெள்ளத்தால் வீடுகளை இழந்த 52 குடுபத்தினருக்கு சேவா பாரதி சார்பில் கட்டப்பட்ட புதிய வீடுகள் வழங்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவா பாரதி சார்பில் 6வது கட்டமாக இம்மாதிரி வீடுகள் வழங்கப் பட்டுள்ளன. இதற்கு முன்பு 1000கும் மேற்பட்ட ௦ வீடுகள் கட்டப்பட்டு வழங்கப் பட்டுள்ளன. இதுவரை வட கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 கிராமங்களில் மொத்தம் 1680 வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டின் பரப்பளவு 300 சதுர அடியாகும். ஒவ்வொரு வீட்டின் கட்டுமான செலவுகள் ரூ.1,40,000. சேவா பாரதி வடகர்நாடகத்தில் வீடு கட்டிக் கொடுப்பதற்காக மட்டும் ரூ.22 கோடி செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.      

ஆதரவற்ற பெண்ணிற்கு வாழ்வு

ஆதரவற்ற பெண்ணிற்கு வாழ்வு தர முன்வந்த நம்பூதரி இளைஞர்

சர்வ மங்கள அறக்கட்டளை இல்லத்தில் இருக்கின்ற சிறுமிகள்

 கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் சர்வ மங்களா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ.மூகாம்பிகா சிறுமிகள் விடுதி ஒன்று துவக்கப்பட்டது. இவ்விடுதியின்  நோக்கம் ஆதரவற்ற மற்றும் ஏழை சிறுமிகளுக்கு புகலிடம், சிறந்த கல்வி மற்றும் தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பதே ஆகும்.

சர்வ மங்கள அறக்கட்டளை இல்லத்தில்

தற்போது விடுதியில் 4 வயது முதல் 20௦ வயது வரை உள்ள பெண்களுடன் அவர்களை கவனித்துக் கொள்வதற்காக 4 சேவிகாக்களும் இருந்து வருகின்றனர். அந்த ஆதரவற்ற சிறுமிகள் விடுதியில் தங்கிப் படித்து வந்த ரேஷ்மா என்கிற பெண்ணைத் திருமணம்  செய்து கொள்வதற்கு அப்பகுதியில்  இருக்கின்ற  ஸ்ரீநாத் நம்பூதரி என்கிற இளைஞர் முன்வந்துள்ளார். துணிச்சலாக ரேஷ்மாவைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்த ஸ்ரீநாத் நம்பூதரியைப் பாராட்டுவோம்.

அவர்களுடைய திருமணம் அக்டோபர் 23 அன்று காலை 7-8 மணிக்குள்ளாக எளிமையான முறையில் தளப் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற இருக்கிறது. அவர்கள் திருமணத்திற்கு நமது வாழ்த்துக்கள்.

துயர் துடைப்போம்

தூரத்துச் சொந்தத்தின் துயர் துடைப்போம்.

செப்டெம்பர் 18 ஆம் தேதியன்று சிக்கிமில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 120 க்கும் மேல். இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநிலத்தில் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிக்கிமை ஒட்டி இருக்கின்ற மேற்கு வங்கம் பீகார் நேபாளம் திபெத் போன்ற இடங்களிலும் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சிக்கிமில் 15000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக இடிந்துவிட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். சுமார் 1 லக்ஷம் கோடி ரூபாய் அளவிற்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் துயர்துடைக்கும் பணியில் சேவா பாரதி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பிற்கு ஆளாகியுள்ள சிக்கிம் மாநில மக்களின் துயர் துடைக்க உதவிக் கரம் நீட்டிடுவோம்.

நிவாரண நிதி தர விருப்பம் உள்ளவர்கள் கீழ் காணும் பெயரில் நன்கொடைகளை அனுப்பி வைக்கலாம். உங்கள் நன்கொடைகளை காசோலையாகவோ (Cheque) வரைவோலையாகவோ (DD) BASTUHARA SAHAYATA SAMITI என்ற பெயரில் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். BASTUHARA SAHAYATA SAMITI 27/1B-BIDAHAN SARANI, KOLKATTA – 700006  Phone: 033-22410603 அல்லது BASTUHARA SAHAYATA SAMITI என்கிற பெயரில் Union Bank of India,  Branch – SEVOKE Road, AC.No. 548002010005529 என்ற வங்கிக் கணக்கில் செலுத்தலாம். நீங்கள் நன்கொடை செலுத்திய விவரத்தை தபால் அல்லது மின்னஞ்சல் வாயிலாக அவர்களுக்கு தெரியப்படுத்தவும்.