நோக்கம்

நோக்கம் 

ஹிந்து ஒற்றுமை நமது லட்சியம். 

ஹிந்து மதம் என்பது வெறும் வழிபாட்டு முறைகளை மட்டும் எடுத்து இயம்பிடும் மதம்மல்ல. அது நமது நாட்டின் வாழ்க்கை முறை. அனைவரயும் அரவணைத்துச் செல்வது என்பதுதான் இதன் சிறப்பு. அவரவர் விருப்பப்படி, அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றபடி அவரவர் தர்மத்திற்கு ஏற்றபடி இறைவனை அடையலாம் என்று கூறும் ஒரே மதம் ஹிந்து மதம் மட்டுமே.  

தற்காலத்தில் எதற்கெடுத்தாலும் மதசார்பற்றது என்று பறைசாற்றுகின்றார்களே அதை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றவர்கள் ஹிந்துக்கள் மட்டுமே. நமது இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அவ்வப்போது இடர்களும் இன்னல்களும் வந்த வண்ணம் இருந்தன. அச்சமயத்தில் எல்லாம் நமது சமயம் பண்பாடு கலாசாரம் போன்றவற்றைக் கட்டிக்காத்திட எத்தனையோ மகான்கள் துறவிகள் ஞானிகள் மன்னர்கள் பாடுபட்டுள்ளனர். சிலர் தங்களது இன்னுயிரையும் ஈந்து நமது சமுதாயத்திற்கு ஒளிவிளக்காக இருந்து வழிகாட்டி வந்துள்ளனர். அதன் காரணமாகவே இன்றும் ஹிந்து தர்மம் ஹிந்துப் பண்பாடு ஹிந்துக் கலாசாரம் உயிர்த் துடிப்புடன் இருந்து கொண்டிருக்கிறது.   

நமது நாட்டின் மீது அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் படையெடுத்த போதெல்லாம் மக்களுக்கும் மன்னனுக்கும் தைரியம் கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தியதில் சமய ஆன்மீக பக்தி இயக்கங்களின் பங்கு அளப்பரியது. சங்கரர் ராமானுஜர் மத்வர் ஆழவார்கள் நாயன்மார்கள் மகான்கள் போன்றவர்கள்தான் நமது சமுதாயத்தினை  ஒருங்கிணைத்து தூக்கி நிறுத்தியவர்கள்.

ராமாயணமும் பாரதமும் பகவத் கீதையும் நமது நாட்டினை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்னிப் பிணைத்துள்ளது. வால்மீகி சம்ஸ்க்ருதத்தில் எழுதியதை கம்பன் தமிழில் வடித்துத் தந்துள்ளார். வியாசரின் பாரதத்தை வில்லிப்புத்தூரார் தமிழில் ஆக்கித் தந்துள்ளார்.  

அறம் பொருள் இன்பம் வீடு என்கிற கோட்பாடு நமது நாடெங்கிலும் காணப்படுகிறது. வேத வேதாந்தக் கருத்துக்களை சாதாரண மக்களுக்கு புரிய வைப்பதற்காக நமது தேசிய மொழிகள் அனைத்திலும் ஆக்கித் தந்துள்ளனர். காடுகளிலும் மலை முகடுகளிலும் வாழ்ந்து வருகின்ற எழுதப் படிக்கத் தெரியா பாமர மக்களுக்கும் கூட இயல், இசை, நாடக, கூத்து, மற்றும் கிராமியப் பாடல்கள் வடிவில் மிக எளிமைப்படுத்திக் கொடுத்து நமது பண்பாட்டினை தர்மத்தினை காத்து வந்துள்ளனர்.

செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்று மகாகவி பாரதி கூறியிருப்பதைப் போல் நம்மக்களிடையே மொழி அடிப்படையில் எந்த பாகுபாடும் வெறுப்புணர்வும் இருந்தது கிடையாது. நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை கன்னட, தெலுங்கு மொழியில்  எழுதி வைத்துக் கொண்டு அம்மாநில மக்கள் படித்து வருவதை இன்றும் கூடக் காண முடியும். 

மத மாற்றம் செய்வது நமது பண்பாடல்ல. நம் மக்கள் மீது அந்நிய மதங்களால் திணிக்கப்பட்டவை அது. எந்த ஒரு நாட்டினையும் அடிமைப்படுத்தி  ஆட்சி  செய்திட வேண்டும் என்கிற எண்ணமும் நம் முன்னோர்களுக்கு என்றுமே இருந்ததில்லை.  போரில் வெற்றி பெற்ற நாட்டின் கலாசார பண்பாட்டுச்  சின்னங்களை அழித்ததில்லை. அவர்கள் மீது நமது கொள்கையை திணித்ததும் இல்லை. ஒரு கையில்  வாளையும் மறு  கையில் மதப்  புத்தகத்தையும்  தூக்கிக் கொண்டு எந்த ஒரு நாட்டு மக்களையும் கொன்றதில்லை. மாறாக நமது பண்பாட்டினால் கலாச்சாரத்தினால் பெருந்தன்மையினால் அவர்களது  மனதில்  நீங்கா இடம் பிடித்துள்ளோம்.  

ஆனால் இன்றோ நமது நாட்டின் பாதுகாப்பு நமது கலாச்சாரம் நமது பண்பாடு நமது வழிபாட்டு முறைகள் மீது பல்முனைத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. நமது போலி மதசார்பற்றவர்கள் ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கண்டும் காணாதவாறு இருந்து கொண்டிருக்கின்றனர். ஹிந்து வாழ்ந்தால் நாடு வாழும் ஹிந்து வீழ்ந்தால் நாடும் வீழும். ஹிந்துவே இந்நாட்டின் ஆதாரம். எனவே ஹிந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் செயலுக்காக இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளை பற்றிய செய்திகளை அதன் பின்னணிகளை எடுத்துரைத்திடவே இந்த வலைத்தளம். ஹிந்து இயக்கங்களின் செய்திகள் நடவடிக்கைகள் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தொகுத்து வழங்கிடவே  இந்த வலைத்தளம்.    

ஹிந்து சங்க செய்தி வலை தளத்தில் வருகின்ற அனைத்து கட்டுரைகள் கருத்துக்களுக்கு அதை எழுதியவர்களே முழு பொறுப்பாவர். அதற்கு ஹிந்து சங்க செய்தி எவ்விதத்திலும் பொறுப்பேற்காது. காப்புரிமை அனைத்தும் அதன் படைப்பாளிகளுக்கே. 

ஹிந்து சங்க செய்தி.நெட் தளத்திற்கு வருகின்ற மறுமொழிகள் அனைத்தும் மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடப்படும். இத்தளத்திற்கு  எழுதுபவர்கள் தங்களது பொறுப்புணர்ந்து எழுதிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். யாரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாக விமர்சனம் செய்வதைத் தவிர்த்திடவும். நடுநிலை தவறாத விமர்சனம் ஆரோக்யமானது.