அமிதாபச்சனிடம் விளக்கம் கேட்கும் ஏ.பி.வி.பி
ஹிந்தி திரைப்பட நடிகர் அமிதாபச்சன் தொலைக் காட்சியில் நடத்தி வருகின்ற கோன் பனேங்கா க்ரோர்பதி (KCB) பொது அறிவுப் போட்டியில் நேற்று (அக்டோபர்11) தவறான கேள்வியைக் கேட்டு தவறான பதிலையும் அளித்துள்ளார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்கிற மாணவர் அமைப்பு எந்த அரசியல் கட்சியின் மாணவர் அணி என்கிற வினா ஒன்றை கேட்டு விட்டு, சரியான பதிலை தேர்ந்தேடுப்பதற்காக முறையே (ஏ) பாரதீய ஜனதா கட்சி (பி ) காங்கிரஸ் கட்சி (சி) பகுஜன் சமாஜ் கட்சி (டி) கம்யூனிஸ்ட் பார்டி ஆப் இந்தியா என நான்கு அரசியல் கட்சிகளின் பெயர்களை கொடுத்து இருந்தார். அவ்வினாவிற்கு சரியான விடையாக பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் அணி என பதிலளித்தார். இது அப்பட்டமான தவறான தகவலாகும்.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்பது சுதந்திரமாக செயல்பட்டு வருகின்ற மாணவர் இயக்கமாகும். இது 1949 ஜூலை மாதம் 9ஆம் தேதியன்று புதுதில்லியில் பதிவு செய்யப்பட்டு (S-385/1949-50) தேசிய அளவில் செயல்பட்டு வருகின்ற மாணவர் அமைப்பு. ஆனால் பாரதீய ஜனதா கட்சி துவக்கப்பட்டதோ 1980 ஆம் வருடம்தான். உண்மை நிலை இப்படி இருக்க எந்த அடிப்படையில் நிகழ்ச்சியை நடத்தும் அமிதாபச்சன் இக்கேள்வியைக் கேட்டார்.
இதை கண்டித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய பொதுச் செயலாளர் உமேஷ்தத் அந்நிகழ்ச்சியை நடத்திடும் நிறுவனத்திற்கும் அமிதாபட்சனுக்கும் விளக்க அறிக்கை கொடுத்துள்ளார்.அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் பற்றி தவறான தகவல் அளித்துள்ள அமிதாபச்சன் இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதை சரிசெய்து அறிவிக்க வேண்டும். இல்லை எனில் நீதி மன்றத்திற்கு செல்ல நேரிடும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
