ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (RSS) 86 ஆண்டுகளுக்கு முன்பு இதே விஜயதசமி நன்னாளன்றுதான் (1925 செப்டம்பர்27) பரம பூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களால் நாகபுரி நகரில் துவங்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தர் லட்சியக் கனவிற்கு செயல் வடிவம் கொடுத்தவர் டாக்டர் ஹெட்கேவார். விஜயதசமி நன்னாளன்று துவங்கப்படும் அனைத்தும் வெற்றி அடையும் என்பது நமது நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வெற்றித்திருநாள் விஜயதசமி அதர்மத்தை அழித்து தர்மம் வெற்றி நடைபோட்ட நாள். எனவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்திடும் நிகழ்ச்சிகளில் விஜயதசமி விழா இடம் பெற்றுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்ட நாளான விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ். கிளைகளில் சீருடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுவிழா நடத்துவது நாடெங்கிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
சென்னை போரூர் காரம்பாக்கம் ஜெயின் கோவில் மைதானத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.விஜயதசமி விழாவிற்கு சென்னை வாழ் நாடார் சங்கத் தலைவர் திரு.சின்னமணி நாடார் அவர்கள் தலைமை தாங்கினார். அம்பேத்கர் புரட்சிப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.மோ. கிருஷ்ணப் பறையனார் அவர்கள் முன்னிலை வகித்தார். வடதமிழக ஆர்.எஸ்.எஸ். (ஷாரீரிக் பிரமுக்) உடற்பயிற்சி பொறுப்பாளர் திரு.டி.சங்கர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
சென்னை மாநகர விஜயதசமி விழா அக்டோபர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு காவிக்கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
விழாவிற்குத் தலைமை தாங்கிய திரு.சின்னமணி நாடார் அவர்கள்
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்.சி சி. யைப் போன்று ஒரு கட்டுப் பாடான சேவை செய்கின்ற இயக்கம். இவ்வியக்கத்தைப் பற்றி சிலர் தவறான கருத்துக்களை கூறுகின்றனர்.அது உண்மை யில்லை என்பதை இங்கு வந்த பின்பு புரிந்து கொண்டேன். இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதை பெருமையாகக் கருதுகின்றேன். எனக்கு சமீபத்தில்தான் 75வது வயது நிறைவு விழா நடந்தது. அதைக் காட்டிலும் இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது. இந்த இயக்கம் வளரவேண்டும். இதன் வளர்ச்சிக்கு நானும் பாடுபடுவேன் என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து Communal Violence Bill என்கிற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது. சென்னை கோட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு.துரைசங்கர் வெளியிட திரு.கிருஷ்ணப் பறையனார் பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீகிருஷ்ணப் பறையனார் தனது உரையில் இது ஒரு அற்புதமான நிகழ்ச்சி. நான் இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பலமுறை தவறாக விமர்சனம் செய்ததுண்டு. எதிர்த்ததுண்டு. எதிர்த்து கட்டுரை எழுதியதும் உண்டு. இங்குள்ள பெரியவர்கள் ஆர்.எஸ்.எஸ். இன் அரும்பணிகள் குறித்துக் கூறினார்கள். நீங்கள் செய்த பெரும் பயிற்சிகளையும் நேரில் நான் பார்த்தேன். இன்று எனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என் வாழ்நாளில் இந்த நாள் பேரின்ப நாளாகும். இன்று சுதந்திரம் என்கிற பெயரில் பல விபரீதங்கள் செய்து வருகின்றனர். ஹிந்துக்களையும் ஹிந்து மதத்தையும் சீரழிக்க பலர் முயற்சிக்கின்றனர். சீர்கேடுகளை சீராக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிறது. இந்த இயக்கம் வளரவேண்டும். அதற்கு நானும் வரும் நாட்களில் உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறுகிறேன் என்று குறிப்பிட்டார்.
சிறப்புரை ஆற்றிய திரு டி.சங்கர் அவர்கள் தனது உரையில் இந்நாளில்தான் மகிஷாசுரனை மஹிஷாசுரமர்தினி வதம் செய்தால். ஸ்ரீ.ராமர் ராவணனை வதம் செய்தனால் இதுதான். தருமயுத்தத்திற்காக பஞ்ச பாண்டவர்கள் ஆயுதத்தை மீண்டும் கையிலேடுத்த நாள் இன்றுதான். மேற்கண்ட மூன்றிலும் அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் வெற்றிபெற வேண்டும் என்பதே நோக்கமாகும்.
மத்திய சென்னை செயலாளர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த இறுதியில் பகுதி செயலாளர் திரு.விஷ்ணு சங்கர் நன்றி கூறினார். 600கும் மேற்பட்ட சீருடை அணிந்த சங்க ஸ்வயம்சேவகர்கள் உட்பட மொத்தம் 1000க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். யோகாசனம் தண்டா போன்ற பயிற்சிகளை முன்னதாக ஸ்வயம் சேவகர்கள் செய்து காண்பித்தனர்.




