பரம பூஜனீய ஸ்ரீகுருஜி கோல்வல்கர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்தவர். 1940 முதல் 1973 வரை 33 ஆண்டுகள் அவ்வியக்கத்தின் அகில பாரதத் தலைவராக இருந்து வழிகாட்டியதுடன் முன்மாதிரியாக வாழ்ந்து கட்டிய மாமனிதர் அவர். 1925ஆம் வருடம் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளன்று டாக்டர் ஹெட்கேவார் அவர்களால் நாகபுரி நகரில் துவக்கப்பட்டது. இன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 87வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
டாக்டர் ஹெட்கேவார் காலத்தில் இருந்தே ஆண்டு தோறும் விஜயதசமி நன்னாளன்று நாகபுரியில் நடைபெற்று வருகின்ற சங்க விழாவினில் ஆர்.எஸ்.எஸ்.இன் அகில பாரதத் தலைவர் சொற்பொழிவு ஆற்றுவது என்கிற பாரம்பரியம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. டாக்டர் ஹெட்கேவார் அவர்கள் 1940 வருடம் காலமானார். அவரைத் தொடர்ந்து ஸ்ரீகுருஜி அவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 34. நாடெங்கிலும் இடைவிடாது சுற்றுபயணம் மேற்கொண்ட ஸ்ரீகுருஜி அவர்கள் 1973இல் காலமாகும்வரை அப்பொறுப்பில் இருந்து இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தார்.
விஜயதசமி விழா நாகபுரியில் இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாளான நவமியன்று ஆயுதபூஜையும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளும் கொண்ட பொது மக்களுக்கான விழாவாக அது நடந்து வருகிறது. இரண்டாவது நாளான விஜயதசமி நாளன்று சங்க ஸ்வயம்சேவகர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுமே சங்கத்தின் அகில பாரதத் தலைவர் அதில் பகேற்று வருகின்றனர். விஜயதசமி நன்னாளன்று அகில பாரதத் தலைவரின் சிறப்பு சொற்பொழிவு இருக்கும்.
ஸ்ரீகுருஜி அவர்கள் 1939 முதல் 1972 முடிய ஒவ்வொரு வருடமும் விஜயதசமி நாளன்று நாகபுரியில் விஜயதசமி விழாவில் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார். 1939 ஆம் வருடம் அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில பாரத பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். அவ்வருடம் நாகபுரி விஜயதசமி விழாவில் அவர் ஆற்றிய உரையினை வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தன் பணிகளைத் தொடங்கி 14 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. பாலபருவத்தைத் தாண்டி குமரப் பருவத்தில் நுழைந்து கொண்டிருக்கிறது. நாட்டில் இந்த நேரத்தில் பலவகையான அமைப்புகளும் நிறுவனங்களும் பணி செய்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில மிகவும் நல்லவை. பிற எல்லாக் காரியங்களையும் அந்த அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் விட்டுவிட்டு ஹிந்துக்கள் பிளவுபட்டுவிடாமல் வலிமையுள்ள ஓர் இயக்கமாக அமைவதற்கான பணியை சங்கம்தான் எடுத்துக் கொண்டுள்ளது.
ஹிந்துஸ்தானத்தின் பழங்கால பெருமைப்படத்தக்க சரித்திரத்தின் மேல் சங்கம் ஆழ்ந்த மதிப்பு வைத்திருக்கிறது. தேசத்தின் ஒளிமிகுந்த எதிர்காலத்தின் மேல் நாம் முழு அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
நாடு முழுவதுமான எனது சுற்றுப் பயணத்தில் ஹிந்துக்களின் மனநிலை யில் காணப்படுகின்ற ஒற்றுமையைக் கண்கூடாக நான் உணர்ந்திருக்கிறேன். வெளிப்படையான நமது கருத்து வேற்றுமைகள் எவ்வளவுதான் தீவிரமாக இருந்த போதிலும் ஹிந்துக்களின் ஆழ்மனத்திலுள்ள ஒற்றுமை தகர்க்க முடியாதது.
திறமையுள்ள ஒரு ஹிந்து ஸ்தாபனத்தின் மூலமாகத்தான் ஹிந்துஸ்தானம் எழுச்சியுற முடியும் என்பதுதான் நமது திடமான நம்பிக்கை. அதனால்தான் வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபடாமலும் எந்த அரசியல் குழுவிலும் சேராமலும் நம்முடைய நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற உறுதியெடுத்துக் கொண்டு அதே திசையில் பணிகள் செய்வதற்கு தீர்மானித்து இருக்கிறோம்.
சங்கத்தை ஒருவித படையமைப்பு என்றுகூடச் சொல்லலாம். இன்றைய விளக்கங்களுக்கேற்ப இது படையமைப்புதான். ஏனெனில் எந்த ஒரு க்ஷத்திரியனும் தன் சொந்த வாழ்க்கையைச் சமுதாயத்தில் இணைத்து அதன் நோக்கத்துடன் ஒன்றிப் போகாத வரையில் சமுதாயத்திற்கான தன் கடைமையைச் சரியான வழியில் தீர்க்க முடியாது.
நம்முடைய கலாச்சாரத்திற்கும் சமுதாயத்திற்குமான சேவையை முழுவதுமாக நாம் செய்ய வேண்டும். இதனாலேயே நாம் வெறும் உடற்கல்வி மற்றும் போர்ப் பயிற்சிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தேசிய உணர்வு உண்டாவதற்கு அதிகக் கவனம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒற்றுமையின் இந்த உறுதியான உணர்வின் காரணமாக முழு ஹிந்து சமுதாயத்தையும் ஒருங்கிணைப்பதே சங்கத்தின் வேலையும் செயல்திட்டமும் ஆகும்.
ஹிந்து சமுதாயத்தின் பராக்கிரமம் மற்றும் வலிமையின்மேல் நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.எல்லா ஹிந்துக்களிடமும் ஹிந்துவின் பண்பாட்டு ஒற்றுமையை நிறுவுவதில் சங்கம் வெற்றியடைந்து வருகிறது. எனவே இந்த நாட்டை மிகச் சிறந்த பெருமையின் சிகரத்தில் கொண்டு சேர்க்கின்ற நம் லட்சியத்தைத் தாமதமின்றி நாம் அடைந்து விட முடியும்.